கம்பளா போட்டிக்கு ஆதரவாக மாநில அரசு உள்ளது முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி

கம்பளா போட்டிக்கு ஆதரவாக மாநில அரசு உள்ளது என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-12 21:30 GMT

மங்களூரு,

கம்பளா போட்டிக்கு ஆதரவாக மாநில அரசு உள்ளது என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பேட்டி

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக முதல்–மந்திரி சித்தராமையா நேற்று மாலை விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு வந்தார். மங்களூரு விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

எந்த தகுதியும் இல்லை

சித்தராமையா மீது ஊழல் தடுப்பு தடையில் 30 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த புகார்கள் குறித்து வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை எனவும் எடியூரப்பா குற்றம்சாட்டி உள்ளார். பா.ஜனதாவினர் சி.பி.ஐ.யில் உள்ள ஏராளமான வழக்கை மூடி மறைத்துவிட்டனர். அதுபற்றி எடியூரப்பா எதுவும் பேசமாட்டார். அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அதுகுறித்து எடியூரப்பா என்ன கூறுகிறார்?.

முதல்–மந்திரியாக இருந்தபோது, ஊழல் வழக்கில் சிக்கி பதவியை இழந்து சிறைக்கு சென்று வந்தவர் எடியூரப்பா. அவர் எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குற்றம்சாட்டுகிறார். ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்தவர், எனது தலைமையிலான ஆட்சியை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

கம்பளா போட்டிக்கு ஆதரவாக...

நாங்கள் பி.எப்.ஐ. உள்ளிட்ட அமைப்புகளுக்கு காங்கிரஸ் அரசு ஆதரவாக செயல்படுவதாக எடியூரப்பா கூறுகிறார். நாங்கள் யாருக்கும் ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எந்த கிரிமினல் அமைப்புகளுக்கும், மதம் சார்ந்த அமைப்புகளுக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. எங்களுக்கு இந்து, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று தான். காங்கிரஸ் கட்சி மீது எடியூரப்பா தேவையில்லாத குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

கம்பளா போட்டிக்கு தடை விதிப்பது குறித்து பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளது. கம்பளா போட்டிக்கு ஆதரவாக மாநில அரசு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்