2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி: கட்டிடம் கட்ட தோண்டிய பள்ளங்கள் ஒரு மாதமாகியும் மூடவில்லை கிராம மக்கள் குற்றச்சாட்டு

பள்ளிக்கு கட்டிடம் கட்ட தோண்டிய பள்ளங்கள் ஒருமாதமாகியும் மூடாமல் கிடந்ததால் தான் 2 சிறுவர்களின் உயிரை பலிவாங்கி விட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Update: 2017-11-12 22:45 GMT

குறிஞ்சிப்பாடி,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரியகண்ணாடி கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல ஆரம்ப பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கு தற்போது அதேபகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதேபகுதியை சேர்ந்த ஆனந்தஜோதி மகன் கிருத்திக்ராஜன்(வயது 7) என்பவர் 3–ம் வகுப்பு படித்து வந்தான். அதேபகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் விஸ்வா(4). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் சிறுவர்கள் இருவரும் புதிய கட்டிடம் கட்டும் இடத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு தூண் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த ஒரு பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் சிறுவர்கள் இருவரும் தவறி விழுந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இருவரின் உடலையும் குறிஞ்சிப்பாடி போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கொண்டு கொண்டு சென்றனர். உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று சிறுவர்கள் இருவரின் உடலும் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் வந்து சிறுவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர் செங்கல்வராயன், ராமர், கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வனும் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், ஒன்றிய செயலாளர் குரு, நகர செயலாளர்கள் பாலமுருகன், தங்கஜோதிமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

சிறுவர்கள் 2 பேரின் உயிரையும் பலிவாங்கி உள்ள பள்ளம் தோண்டப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகுவதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான தூண் அமைக்க அங்கு மொத்தம் 15 பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் சுமார் 7 அடி ஆழம் கொண்டதாக இருக்கிறது.

பொக்லைன் எந்திரத்தை கொண்டு தோண்டியதால், தற்போது பெய்த மழைக்கு மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் மேலும் அகலமாக விரிந்து கிடக்கிறது. கிணறு போன்று மழைநீர் நிரம்பி கிடக்கிறது. இந்த பகுதியில் விளையாடிய போது தான் சிறுவர்கள் இருவரும் உள்ளே தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியாகி இருக்கிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த ஒருமாதமாக இந்த பள்ளங்கள் தோண்டப்பட்டு கிடக்கிறது. கட்டுமான பணியை துரிதமாக மேற்கொள்ளாததே இவர்கள் 2 பேர் சாவுக்கு காரணமாகும். மேலும் பலரின் உயிரை பறிப்பதற்கு முன்பாக, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இந்த நீரை வெளியேற்றுவதுடன் கட்டுமான பணியையும் தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்