கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப் டிரைவர்களுக்கு கட்டுப்பாடு
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப் டிரைவர்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
கம்பம்,
கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு பெண் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்று வருகின்றனர். குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தினமும் 200– க்கும் மேற்பட்ட ஜீப்களில் மலைப்பாதை வழியாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
இவர்கள் காலையில் வேலைக்கு சென்று விட்டு, மீண்டும் மாலையில், அதே ஜீப்புகளில் வீடு திரும்புகின்றனர். இந்த ஜீப்புகளில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றி செல்கின்றனர். மேலும் கம்பம்மெட்டு மலைப்பாதையில் ஜீப்புகள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதில் ஜீப் டிரைவர்கள் போட்டி போட்டு கொண்டு, கொண்டை ஊசி வளைவுகளை கடக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர்.
இதனால் பல விபத்துகள் ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர். கை, கால்களை சில தொழிலாளர்கள் இழந்திருக்கின்றனர். தொடர்ந்து நடக்கும் விபத்துகளால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து விபத்து நடந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனங்கள் முறையாக பராமரிப்பு இல்லாமலும், டயர்கள் தேய்ந்தும், வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.
மேலும் இது போன்ற வாகனங்களை மலைப்பாதையில் ஓட்டுவதால் விபத்து ஏற்படுவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப் டிரைவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகையை கம்பம்மெட்டு மலைப்பாதையில் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கம்பத்திலிருந்து தோட்ட வேலைக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் 2005–ம் ஆண்டுக்கு பிறகு தயாரித்ததாகவும், நல்ல நிலையில் இயங்க கூடிய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். 2005–ம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பு செய்த வாகனங்களும், ஓட தகுதியற்ற நிலையில் இருக்கக்கூடிய வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. மீறி தகுதியற்ற வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி சென்றால் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.