சென்னையில், சொகுசு கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி குடிபோதையில் இருந்த 5 கல்லூரி மாணவர்கள் கைது
சென்னையில் வேகமாக சென்ற சொகுசு கார் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். காரில் குடிபோதையில் இருந்த கல்லூரி மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அசுரவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் இளைஞர்கள் சிலர் பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். அதிவேகத்தில் சென்ற அந்த காரை இதர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பார்த்தபடி சென்றனர்.
கதீட்ரல் சாலையில் அந்த கார் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளில் உரசி, சாலையோரம் நிறுத்தியிருந்த 5 ஆட்டோக்கள் மீது மோதி பயங்கர சத்தத்துடன் நின்றது. சத்தத்தை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்தனர். கார் மோதியதில் சேதம் அடைந்த ஆட்டோக்களை பார்த்தனர்.
அதில் அப்பளம் போல நொறுங்கியிருந்த ஒரு ஆட்டோவில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் உடல் நசுங்கி இறந்துகிடந்தார். மேலும் சிலர் காயமடைந்து சாலையிலேயே படுத்துக்கிடந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் இதை பார்த்து அச்சத்தில் ஓரமாக நின்றுகொண்டிருந்தனர்.
இதுகுறித்து போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
காரை ஓட்டிவந்த வாலிபர் மற்றும் அவருடன் பயணித்த 4 வாலிபர்களையும் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த 5 பேரும் குடிபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 5 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், குடிபோதையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. உதவி கமிஷனர் யுவராஜ் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:–
சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழில் அதிபர் காஜாமுகமதுவின் மகன் நவீத் அகமது (வயது 20). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2–ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். நவீத் அகமதுவின் நண்பர்கள் கிரண்குமார் (19), விஷால் ராஜ்குமார் (18), ஹரி கிருஷ்ணன் (20), வினோத் (20). இவர்களும் கல்லூரி மாணவர்கள்.
ஒரு நண்பரின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நவீத் அகமது தனது 4 நண்பர்களுடன் தனது சொகுசு காரிலேயே சென்றார். காரையும் அவரே ஓட்டினார். விருந்தில் அனைவரும் மது அருந்தி உள்ளனர். இரவு விருந்து முடிந்ததும் நண்பர்கள் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது குடிபோதையில் வேகமாக காரை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிந்தது.
இதில் ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் அரக்கோணத்தை சேர்ந்த ராஜேஷ் (35) என்பவர் உடல்நசுங்கி இறந்தார். ஆட்டோ டிரைவர்கள் திருமலை (38), மோகன் (31), பாபு (42), பாலன் (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நவீத் அகமது மற்றும் அவரது நண்பர்கள் கிரண்குமார், விஷால் ராஜ்குமார், ஹரி கிருஷ்ணன், வினோத் ஆகியோர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் வார இறுதி நாளான சனிக்கிழமை இரவு என்றாலே ஒருவித அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. குடிபோதையில் இளைஞர் பட்டாளம் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. விபத்துக்கு காரணமானவர்கள் போதை மயக்கத்தில் இருக்க, ஒன்றுமே அறியாத அப்பாவிகள் மரணத்தை தழுவுவது தொடரும் வேதனையாக உள்ளது.