கட்டிட வரைபடம் தயார்: அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்

கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு கட்டிட வரைபடம் தயாரானது. கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Update: 2017-11-12 22:15 GMT
கரூர்,

கரூர் சணப்பிரட்டியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் பூமி பூஜைகள் நடந்தன. நகராட்சிக்கு சொந்தமான 16½ ஏக்கர் நிலப்பரப்பில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் கட்டிடத்திற்கான வரை படத்தை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் தயாரித்தனர். இந்த வரைபடத்திற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் கேட்டபோது அதிகாரிகள் கூறியதாவது:-

கரூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கான வரைபடம் தயாராகி விட்டது. ஒரு வாரத்தில் கட்டுமான பணிகள் தொடங்கும். தற்போது இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிக்கு வசதியாக அங்கிருக்கும் மின் கம்பங்கள் மாற்றப்பட உள்ளன.

கல்லூரியானது தரைதளம் மற்றும் 6 மாடி கட்டிடத்தில் அமைய உள்ளது. இதேபோல மருத்துவமனையும் தரைதளம் மற்றும் 7 மாடி கட்டிடத்துடன் கட்டப்பட உள்ளது. டாக்டர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் தங்குவதற்கான அறைகள் தனியாக கட்டப்பட உள்ளது. வாகனங்கள் வந்து செல்லவும், நிறுத்தவும் வசதியாக வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு ஓராண்டு காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

மேலும் செய்திகள்