தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு எதிரி தான்; செல்லூர் ராஜூ பேச்சு
தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு எதிரி தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
சிவகங்கையில் வருகிற 18–ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 17–ந் தேதி மதுரை வருகிறார். அவருக்கு மதுரையில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை என்றைக்கும் அ.தி.மு.க.வின் கோட்டை. எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெறுவது உறுதி. ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்த நிலையில், அவர் அறிவித்த திட்டங்களையும், எண்ணங்களையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். யாரும் எளிதாக சந்திக்கும் முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். யார் கோரிக்கை வைத்தாலும், அதனை பரீசிலனை செய்து நிறைவேற்றி தருகிறார். அவர் மதுரைக்கு வருகிற 17–ந் தேதி வருகிறார். அவருக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும்.
நம்மை பிரிந்து சென்றவர்கள் நமது சகோதரர்கள் தான். நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான். அவர்கள் எப்போதும் நம்மிடம் வரலாம். ஆனால் என்றைக்கும் நம்முடைய எதிரி தி.மு.க. தான். எனவே தி.மு.க.வுடன் யார் கூட்டணி வைத்தாலும், அவர்களும் நமக்கு எதிரி தான். நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் அவர்களும் நமக்கு எதிரி தான்.
இவ்வாறு அவர் பேசினார்.