வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை பெய்தும் அணைகளில் நீர் நிரம்பவில்லை

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும் அணைகளில் நீர் நிரம்பாததற்கு, வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளே காரணம் எனக் கூறி அவற்றை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2017-11-12 22:15 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் பயிர் சாகுபடி மழையை நம்பித்தான் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கண்மாய்களிலும், அணைகளிலும் மழை பெய்யும் காலங்களில் நீரை தேக்கி வைத்தால் தான் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கு பாசன வசதி கிடைக்கும் நிலை ஏற்படும். கண்மாய்களில் நீர் நிரம்பினால் தான் விவசாய கிணறுகளிலும் நீர் பெருக வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் வரத்துக் கால்வாய்களிலும் நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் மழை பெய்தும் கூட அணைகளிலும் கண்மாய்களிலும் தண்ணீர் நிரம்புவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. அதிலும் அணைக்கட்டுகளை மராமத்து செய்ய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் முறையாக மராமத்து செய்யப்படாததால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மேடேறி தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைகளுக்கு இடையே அணைப்பகுதிக்கு ஓரளவு நீர் வந்தாலும் ‌ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேறி விடுகின்றது. இதனால் அணைகளில் முழுமையாக நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இந்த மாவட்டத்தில் பெரியாறு அணையில் 14.5 மீட்டர் நீரை தேக்கி வைக்க வாய்ப்பிருந்தும் தற்போது 9.72 மீட்டரும், 13 மீட்டர் நீரை தேக்கி வைக்கக்கூடிய கோவிலாறு அணையில் 3.63 மீட்டரும், 7 மீட்டர் ஆழம் கொண்ட வெம்பக்கோட்டை அணையில் 3.5 மீட்டரும், 5.5 மீட்டர் நீரை தேக்கி வைக்கக்கூடிய கோல்வார்பட்டி அணையில் 2.5 மீட்டரும், 7.5 மீட்டர் ஆழம் கொண்ட ஆனைக்குட்டம் அணையில் தற்போது 4.21 மீட்டரும், 2.5 மீட்டர் ஆழம் கொண்ட குல்லூர்சந்தை அணையில் 1 மீட்டரும், 6.85 மீட்டர் அளவிற்கு நீரை தேக்கி வைக்கக்கூடிய இருக்கன்குடி அணையில் 2.7 மீட்டரும், 10 மீட்டர் ஆழம் கொண்ட சாஸ்தா கோவில் அணையில் 7.9 மீட்டரும் தண்ணீர் உள்ளது. அதிலும் குல்லூர்சந்தை அணையில் ஆகாயத் தாமரை நீரின் மேல் படர்ந்துள்ள நிலையில் அதனை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அணைகளில் முழுமையாக நீரை தேக்கி வைக்க முடியாததற்கு காரணம் வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பும், நீர் பிடிப்பு பகுதிகளை மராமத்து செய்யாததும் தான் காரணம் என கூறப்படுகின்றது. எனவே வறட்சி பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள இந்த மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயிர் சாகுபடி செய்ய வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அணையின் நீர்பிடிப்பு பகுதியை தூர்வாரவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் பயிர் சாகுபடி பரப்பளவு வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டு விடும்.

மேலும் செய்திகள்