மின்சாரம் தாக்கி டிரைவர் பலி பழுதடைந்த மின்விளக்கை மாற்றிய போது பரிதாபம்

ஆரல்வாய்மொழி அருகே பழுதடைந்த மின்விளக்கை மாற்றிய போது, மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார்.

Update: 2017-11-12 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி, சந்தைவிளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 40), டெம்போ டிரைவர். இவருக்கு பிரபா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று காலையில் முத்துகிருஷ்ணன் வேலைக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் ஒரு மின் விளக்கு எரியாமல் இருப்பதாக மனைவி கூறினார். இதையடுத்து அவர் பழுதடைந்த மின்விளக்கை சரி செய்ய முடிவு செய்தார். இதற்காக, பழைய மின்விளக்கை கழற்றிவிட்டு, புதிய விளக்கை பொருத்த முயன்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகிய நிலையில் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அவர்கள், முத்துகிருஷ்ணனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்