முதல்–அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் மனு கொடுக்க இருந்த 20 எம்.எல்.ஏ.க்களை மிரட்டவே வருமான வரி சோதனை

முதல்–அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் மனுகொடுக்க இருந்த மேலும் 20 எம்.எல்.ஏ.க்களை மிரட்டவே வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2017-11-12 23:15 GMT

மானாமதுரை,

மானாமதுரையில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:– நாங்கள் 18 எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வலியுறுத்தி தமிழக கவர்னரிடம் மனு கொடுத்ததுபோல் மேலும் 20 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடியின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் அவரை மாற்ற வேண்டும் என்றும் கவர்னரிடம் மனு கொடுக்க ஏற்பாடுகள் செய்தனர். இதனை தடுக்கவும் அவர்களை மிரட்டவும்தான் இந்த வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளனர். நாங்கள் அதனை வரவேற்றோம், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றோம். பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஓ.பன்னீர்செல்வம் என அனைவரையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

விசாரணை கமி‌ஷன் என்பது கண்துடைப்பு என தெரிகிறது. நட்பு என்றால் அது சசிகலா தான். நான் அவரை சந்தித்தபோது உங்களை பற்றி தவறாக பேசுகிறார்கள் அதனால் ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட வேண்டும் என சொன்னேன். அதற்கு அவர், ஜெயலலிதா வீடியோ எடுக்க மட்டுமே சொன்னார் அதை வெளியிட சொல்லவில்லை. அவர் இப்போது மறைந்து விட்டார். எப்படி வெளியிடவது என்று கூறினார். இவ்வாறு அவர் பேசிறார்.

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி பேசியதாவது:– பொதுச்செயலாளர் சசிகலாவால் அமைச்சர் ஆனவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளம்புகின்றனர். அவருடைய மரணம் இயற்கை மரணமே, எந்த விசாரணைக்கும் தாயார் என்று துணை பொதுச்செயலாளர் கூறியுள்ளார். முதலில் விசாரணையை ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து தொடங்க வேண்டும்.

அப்போதுதான் உண்மை வெளியேவரும் உயிரோடு இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்தித்தார் பிரதமர், ஆனால் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் வரவில்லை. கட்சியின் பொதுசெயலாளர் சசிகலா இல்லை என்றால் எடப்பாடி அணியினர் என்றோ அ.தி.மு.க. கட்சியை கலைத்து இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் உமாதேவன், ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, நகர செயலாளர் கோபால்,ஜெயலலிதா பேரவை செயலாளர் நாகசேகர், என்.பி.நமச்சிவாயம், கிளை கழக செயலாளர் முத்து,வக்கீல் குருமுருகானந்தம், பாபு, மாணவரணி செயலாளர்கள் விஜயகுமார், அசோக், நிர்வாகிகள் பாக்கியம், நாகு நரசிங்கம், மேட்டுமடை செந்தில், இளையான்குடி சிவநேசன் உள்பட கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்