துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

வசாயில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் வாலிபர் ஒருவர் மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-11-11 22:11 GMT
மும்பை,

வசாயில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் வாலிபர் ஒருவர் மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மீது போலீசார் பொய் வழக்குப்போட்டதால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

தீக்குளித்த வாலிபர்

பால்கர் மாவட்டம் வசாயில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் 22 வயது வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென தன் கையில் வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரது உடலில் எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த வாலிபர் போலீசாரையும் கட்டிப்பிடிக்க வந்ததாக தெரிகிறது. இதனால் போலீசாரால் அவரது உடலில் எரிந்த தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. இந்தநிலையில் உடலில் தீப்பிடித்து காயமடைந்த அந்த வாலிபரை போலீசார் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அந்த வாலிபர் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கஸ்துர்பா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

மானபங்க வழக்கு

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளித்த வாலிபர் விரார் கிழக்கு பகுதியை சேர்ந்த விகாஸ் என்பது தெரியவந்தது. விகாஸ் மீது அவரது குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விகாஸ் மீது மானபங்க வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் விகாஸ் தன் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துவிட்டதாக நண்பர்களிடம் கூறிவந்துள்ளார். தன் மீது பொய் வழக்குப்போட்ட விரக்தியில் அவர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தார்

இந்தநிலையில் தீக்குளித்த விகாஸ் நேற்று அதிகாலை 3.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வசாயில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்