‘சூப்பர் ஸ்டார் என்பதற்காக அலிபாக்கையே வாங்கிவிட்டதாக அர்த்தமா?’ நடிகர் ஷாருக்கான் மீது பாய்ச்சல்

நடிகர் ஷாருக்கானின் செயலால் ஆவேசம் அடைந்த ஜெயந்த் பாட்டீல் எம்.எல்.சி., ‘‘நீங்கள் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். அதற்காக அலிபாக்கை விலைக்கு வாங்கிவிட்டதாக அர்த்தமா?’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-11 22:30 GMT

மும்பை,

நடிகர் ஷாருக்கானின் செயலால் ஆவேசம் அடைந்த ஜெயந்த் பாட்டீல் எம்.எல்.சி., ‘‘நீங்கள் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். அதற்காக அலிபாக்கை விலைக்கு வாங்கிவிட்டதாக அர்த்தமா?’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் பிறந்தநாள்

ராய்காட் அருகே உள்ள அலிபாக் கடற்கரை மராட்டியத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு சினிமா பிரமுகர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் ஏராளமான பண்ணை வீடுகள் இருக்கின்றன. வார விடுமுறை நாட்களில் அலிபாக் கடற்கரைக்கு பொதுமக்கள் படையெடுப்பது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 3–ந் தேதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி பொது செயலாளர் ஜெயந்த் பாட்டீல் எம்.எல்.சி., மும்பையில் இருந்து படகில் அலிபாக் செல்வதற்காக ‘கேட்வே ஆப் இந்தியா’ வந்தார். அப்போது, படகு துறையில் நடிகர் ஷாருக்கான் செல்வதற்காக மற்றொரு படகு நிறுத்தப்பட்டிருந்தது.

ஜெயந்த் பாட்டீல் ஆவேசம்

இதனால், ஜெயந்த் பாட்டீல் பயணிக்க இருந்த படகு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதோடு, நடிகர் ஷாருக்கானை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், அவராலும் குறிப்பிட்ட நேரத்தில் படகில் ஏற முடியவில்லை. இதனால், ஆவேசம் அடைந்த ஜெயந்த் பாட்டீல் எம்.எல்.சி., நடிகர் ஷாருக்கானை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘‘நீங்கள் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். அதற்காக அலிபாக்கையே வாங்கிவிட்டதாக அர்த்தமா? என்னுடைய அனுமதி இல்லாமல், உங்களால் அலிபாக்கில் காலடி எடுத்து வைக்க முடியாது’’ என்று ஆவேசத்துடன் கூறியிருந்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொறுமை காத்தேன்

மேலும், ஷாருக்கானின் ரசிகர்கள் ஜெயந்த் பாட்டீலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொங்கினர். இதனால், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த சூழலில், ஒட்டுமொத்த சம்பவத்தையும் விளக்கி ஜெயந்த் பாட்டீல் எம்.எல்.சி. செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

ஷாருக்கானை காண்பதற்காக ‘கேட்வே ஆப் இந்தியா’வில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவரும் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அவரது பாதுகாப்புக்காக சில போலீஸ் அதிகாரிகளும் அங்கு இருந்தனர். நான் கொஞ்ச நேரம் பொறுமை காத்தேன். ஆனாலும், ஷாருக்கானின் படகு அங்கிருந்து கிளம்புவதாக தெரியவில்லை.

ஷாருக்கான் ரசிகன்

என்னை பார்த்த பின்னரும், போலீசார் எதுவும் செய்யவில்லை. இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. உடனே ஷாருக்கான் அருகே சென்று, அவரை கேள்விகளால் துளைத்தேன். நானும் ஷாருக்கானின் ரசிகன் தான். ஆனாலும், அன்றைக்கு நடந்த சம்பவம் சரியானது அல்ல. சூப்பர் ஸ்டார்களுக்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கலாம். அதற்காக மற்றவர்கள் பாதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

இவ்வாறு ஜெயந்த் பாட்டீல் எம்.எல்.சி. தெரிவித்தார்.

நடிகர் ஷாருக்கான் தன்னுடைய 52–வது பிறந்தநாளை அலிபாக்கில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்