டெங்கு காய்ச்சல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் உள்ளது கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

Update: 2017-11-11 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நகராட்சி பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள், மருத்துவக் குழுக்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த 500 பணியாளர்கள் மூலம் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் வீடு, வீடாகச் சென்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம், திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சுரேஷ், நகர்நல அலுவலர் வினோத்குமார், நகராட்சி பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி 10 வார்டுகளில் ஒரு வார்டுக்கு 12 மஸ்தூர்கள், 30 மகளிர் குழு உறுப்பினர்கள், 4 நகராட்சி பணியாளர்கள், 2 கொசுமருந்து புகை தெளிக்கும் பணியாளர்கள் உள்பட மொத்தம் 50 பணியாளர்கள் மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணியாளர்கள் 10 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் தீவிர டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியை முற்றிலும் ஒழிக்கும் பணிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈடுபட்டனர்.

இந்த 10 வார்டுகளில் உள்ள 5 அங்கன்வாடி மையங்களில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

முன்னதாக கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறைந்து கட்டுபாட்டுக்குள் உள்ளது. தற்போது அரசு மருத்துவமனையில் 19 நோயாளிகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தினமும் அதிகாலை முதல் நண்பகல் வரை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் மாவட்டம் முழுவதும் காலை முதல் மாலை வரை அதிக பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளபட உள்ளது. திருவண்ணாமலை நகராட்சியில் தொடர்ந்து 4 நாட்களுக்கு தினமும் 10 வார்டுகள் வீதம் 500 பணியாளர்கள் கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் இந்த பணிகள் முடிந்த அடுத்த 5 நாட்களில் டெங்கு காய்ச்சல் வெகுவாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கலெக்டர் டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் உள்ள கழிவறைகள், அனைவருக்கு கல்வி இயக்கத்தின் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.

பின்னர் திருவண்ணாமலை நகராட்சி 4-வது வார்டில், 4-வது தெருவில் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு உற்பத்தி குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒரு பழைய வீட்டில் பின்புறம் உள்ள டிரம், ஆட்டுக்கல் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தியாகி இருந்ததையும், கிணற்றில் இருந்த தண்ணீர் அசுத்தமாக இருந்ததையும் பார்த்து கலெக்டர் உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து 10-வது தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார். 

மேலும் செய்திகள்