புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை மனைவி அடிக்கடி செல்போனில் பேசியதால் விபரீத முடிவு

சோமரசம்பேட்டை அருகே, மனைவி அடிக்கடி செல்போனில் பேசியதால் ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2017-11-11 22:15 GMT
சோமரசம்பேட்டை,

சோமரசம்பேட்டை அருகே உள்ள போதாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் மகேந்திரன்(வயது 28). எலக்ட்ரீசியன். இவருக்கும், கரூர் மாவட்டம் குளித்தலை கோரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகள் விஜயா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஜயா, யாரிடமோ அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும், இதனை மகேந்திரன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன், மனைவியை அழைத்து சென்று மாமியார் வீட்டில் விட்டுவிட்டு அன்று இரவு போதாவூருக்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்த மகேந்திரன் மனம் வெறுத்துப்போய் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை வீட்டில் மகேந்திரன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மகேந்திரன் எழுதி வைத்திருந்ததாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என்று மகேந்திரன் எழுதி இருந்ததாக போலீசார் கூறினர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்