கடலூர் கூத்தப்பாக்கம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை கொள்ளை
கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
கடலூர்,
கடலூர் கூத்தப்பாக்கம் முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 74). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். இவரது மனைவி புஷ்பகாந்தம். இவர்களது மூத்த மகள் கிரிஜா கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இளையமகள் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சக்திவேல் அவரது இளையமகளை பார்த்து வருவதற்காக கடந்த ஒருவாரத்துக்கு முன்பு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் புஷ்பகாந்தமும், கிரிஜாவும் வீட்டில் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம்போல கதவை பூட்டி வீட்டு படுத்து உறங்கினர். பின்னர் நேற்று காலையில் எழுந்த புஷ்பகாந்தம் வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது மாடியில் உள்ள அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவின் கதவுகள் திறந்து இருந்தன. அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளையும் காணவில்லை.
இரவு நேரத்தில் யாரோ மர்ம மனிதன் வீட்டின் உதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச்சென்று விட்டான். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் குற்றப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் தகவு, ஜன்னல், பீரோவின் கதவு ஆகிய இடங்களில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக இரவில் மர்ம மனிதர்கள் சைக்கிளில் அந்த தெருவை சுற்றி வந்ததை அங்கிருப்பவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த பகுதியில் வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் கதவு பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகிறார்கள்.