எலச்சிப்பாளையம் அருகே பள்ளி பஸ் மீது லாரி மோதி 24 மாணவ-மாணவிகள் காயம்

எலச்சிப்பாளையம் அருகே தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 24 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

Update: 2017-11-11 22:45 GMT
எலச்சிப்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அருகே சக்கராம்பாளையத்தில் ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை அழைத்து வர பள்ளி சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மூலம் மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீடுகளுக்கும் சென்று வருகிறார்கள்.

நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு ஒரு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் வரதராஜ் (வயது 32) ஓட்டிச்சென்றார்.

லாரி மோதியது

எலச்சிப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி விருதாச்சலம் நோக்கி வந்தது. இந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் பள்ளி பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள் ‘அய்யோ, அம்மா‘ என்று கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மாணவிகள் இவாஞ்சலின் (5), ஸ்ரீமதி (10), தர்ஷினி (13), மாணவர்கள் பிரதீப் (5), இளமாறன் (11), தினேஷ் (13) உள்பட 24 மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். மேலும், பஸ்சில் இருந்த பள்ளிக்கூட ஆயா உமாதேவியும் (40) காயமடைந்தார்.

டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, தாசில்தார் பூவராகவன், எலச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், காயமடைந்த மாணவ-மாணவிகளை பொதுமக்கள் துணையுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக எளையாம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து எலச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான விருதாச்சலத்தை சேர்ந்த உபேந்திராவை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்