‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு உதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது’ தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு உதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-11-11 22:45 GMT

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் அரசு உதவிபெறும் ஸ்ரீதேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்புகளில் மலையாள வழிக்கல்வியில் புவியியல், அரசியல் விஞ்ஞானம், வேளாண்மை ஆகிய பாடங்களை படிக்கும் மாணவிகளுக்கு பொதுப்பாடப்புத்தகங்கள், வினாத்தாள்கள் ஆகியவற்றை மலையாளத்தில் வழங்க உத்தரவிட வேண்டும் என்று பெற்றோர்– ஆசிரியர் சங்கத்தலைவர் டி.எஸ்.சுரேஷ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் பள்ளியில் மேல்நிலைக்கல்வியில் 32 மாணவிகள் மட்டுமே படிக்கிறார்கள். அவர்களுக்கான கோரிக்கையை பொதுநலன் சார்ந்ததாக கருத முடியாது. இந்த மாணவிகளுக்கு மட்டும் மலையாளத்தில் பாடப்புத்தகம், வினாத்தாள் தயாரிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன” என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

“அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பொதுநல மனு அல்ல என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது. கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து நடைபெறவும், மாணவ–மாணவிகளின் கல்விக்கு தேவையான உதவிகளை வழங்குவது அரசின் கடமையாகும்.

அனைத்து மொழி மற்றும் மதவாரி சிறுபான்மை கல்வி நிறுவனங்களை அவர்கள் விருப்பப்படி நடத்த அரசியலமைப்பு சட்டம் பிரிவு 30–ன்படி உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேபிரிவில் மொழி, மத ரீதியான சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு உதவி வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘மலையாளத்தில் வினாத்தாள் தயாரித்தல் பணியை இப்பள்ளி ஆசிரியர்களை வைத்தே மேற்கொள்ள வேண்டியது வரும், இதனால் ரகசியம் காக்க முடியாமல் போய், முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது’ என்று அரசு தரப்பில் கூறுவதையும் ஏற்க முடியாது.

எனவே மலையாளத்தில் பாடப்புத்தகம், வினாத்தாள் வழங்குவது கல்வித்துறையின் கடமை. அந்த கடமையில் இருந்து விலக முடியாது. அப்படி விலகினால் அரசியலமைப்பு சட்டத்தின் 30–வது பிரிவு அர்த்தமற்றதாகிவிடும்.”

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்