தெருவிளக்குகளை சரி செய்யக்கோரி மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு அருகே தெருவிளக்குகளை சரிசெய்யக்கோரி மின்கம்பங்களில் தீப்பந்தத்தை ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளது கடுவனூர் ஊராட்சி. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள சங்கராபுரம் சாலை, திருவண்ணாமலை சாலை, சிவன்கோவில் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதில் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்குகள் பழுதாகின. இதனால் கிராமம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் கிராமத்தில் தெருக்களில் உள்ள மின்கம்பங்கள், உயர் மின் கோபுரங்களில் தீப்பந்தத்தை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள தெருக்களில் கடந்த 8 மாதங்களாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் கிராமம் முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் இப்பகுதியில், திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. மேலும் இரவு நேரங்களில் கிராமத்தில் விஷஜந்துகளின் நடமாட்டமும் அதிகமாக இருப்பதால் நாங்கள் கடும் அவதியடைந்து வருகிறோம். பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்து தரக்கோரி உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை விளக்குகள் சரிசெய்து தரப்படவில்லை. இதனால் தான் நாங்கள் தற்போது மின்கம்பங்களில் தீப்பந்தத்தை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன்பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.