பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் வரதட்சணை கேட்டு மனைவி மீது தாக்குதல்

பெங்களூருவில், பெண் குழந்தை பிறந்ததால் வரதட்சணை கேட்டு மனைவி மீது தாக்குதல் நடத்திய கம்ப்யூட்டர் என்ஜினீயர் மற்றும் அவருடைய குடும்பத்தினரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2017-11-11 20:30 GMT
பெங்களூரு,

பெங்களூருவில், பெண் குழந்தை பிறந்ததால் வரதட்சணை கேட்டு மனைவி மீது தாக்குதல் நடத்திய கம்ப்யூட்டர் என்ஜினீயர் மற்றும் அவருடைய குடும்பத்தினரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெண் குழந்தை பிறந்தது


பெங்களூரு ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவருடைய மனைவி நாகமணி. இந்த தம்பதியின் மகன் சேத்தன். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஹர்சிதா(வயது 30) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஹர்சிதாவுக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் தங்களின் பேத்தியை தத்தெடுத்து வளர்க்கும்படி நாகராஜ்-நாகமணி ஆகியோர் ஹர்சிதாவிடம் கூறியுள்ளனர். இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு ஹர்சிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

வரதட்சணை கொடுமை

பெண் குழந்தை பிறந்ததால் சேத்தன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர். மேலும், சேத்தன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஹர்சிதாவை அடித்து உதைத்ததாக தெரிகிறது. அத்துடன் மாத்திரைகள் கொடுத்து ஹர்சிதாவை கொலை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால், மனம் உடைந்த ஹர்சிதா தன்னுடைய மகளை தனது தாயிடம் கொடுத்தார். ஹர்சிதாவின் தாய் தனது கண்காணிப்பில் பேத்தியை வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹர்சிதாவின் தாய் அந்த குழந்தையை, தனது மருமகன் சேத்தனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் பெண் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் பெற்றோரிடம் இருந்து கூடுதலாக வரதட்சணை வாங்கி வரவேண்டும் என்று கூறி ஹர்சிதாவை சேத்தன் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு சேத்தனுக்கு அவருடைய பெற்றோர், சகோதரி ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

போலீஸ் தேடுகிறது


தொடர் தொல்லையால் மனம் உடைந்த ஹர்சிதா, தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர், பெண் குழந்தையை வளர்க்க வரதட்சணை கேட்டு தொல்லை கொடுப்பதாக சேத்தன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது ஜே.பி.நகர் போலீசில் ஹர்சிதா புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே, போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பதை அறிந்த சேத்தன் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 

மேலும் செய்திகள்