பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகியின் சமாதி இடிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல், 59 பேர் கைது

தேனியில், பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகியின் சமாதியை நெடுஞ்சாலைத்துறையினரும், போலீசாரும் இணைந்து அகற்றியதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-11-11 22:30 GMT

தேனி,

தேனி தீயணைப்பு நிலையம் அருகில் வசிப்பவர் செவ்வாழைராசு. இவர், திரைப்பட குணச்சித்திர நடிகராக உள்ளார். இவருடைய மூத்த மகன் எஸ்.ஆர்.தமிழன். இவர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தார்.

கடந்த 2014–ம் ஆண்டு இவர் இறந்தார். அவருடைய உடல் தேனி–பெரியகுளம் சாலையில் ரத்தினம் நகர் அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு கடந்த 2 ஆண்டுகளாக அவருடைய நினைவு நாளில் குடும்பத்தினரும், உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, எஸ்.ஆர்.தமிழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி கட்டப்பட்டது. மயானமாக பயன்படுத்தும் இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று தெரிவித்தனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து அந்த சமாதியை நேற்று பொக்லைன் வைத்து இடித்து அகற்றினர். இதற்காக அங்கு 4 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் சிலர் அங்கு வந்து, சமாதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து சக்கரவர்த்தி உள்ளிட்ட 13 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி, கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.

சமாதி இடிக்கப்பட்டதை கண்டித்து தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் தேனி நேரு சிலை, பங்களாமேடு ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேரு சிலையில் மறியல் செய்த உத்தமபாளையம் இளைஞரணி தலைவர் அருண்குமார் தலைமையில் 35 பேரையும், பங்களாமேடு பகுதியில் மறியல் செய்த மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நாகராஜ் உள்பட 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

மறியல், தள்ளுமுள்ளு காரணமாக மொத்தம் 59 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே சமாதி இடிக்கப்பட்ட இடத்துக்கு தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அவர்களும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர், சமாதியில் முன்பு இருந்தது போல் மண் திட்டு வைக்க அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் மண் திட்டு உருவாக்கி, அதற்கு மாலை அணிவித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தேனியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மயானம், நேரு சிலை சிக்னல், அல்லிநகரம் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்