கோவையில், போலி சிம்கார்டை பயன்படுத்தி தொழில்அதிபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.6¾ லட்சம் அபேஸ்

போலி சிம்கார்டை பயன்படுத்தி, கோவை தொழில் அதிபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.6¾ லட்சத்தை நூதனமுறையில் திருடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-11-11 22:15 GMT

கோவை,

கோவை ரிச்சர்டுவீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). தொழில் அதிபர். இவர் துடியலூரில் என்ஜினீயரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கோவை பேரூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி யில் கணக்கு வைத்து உள்ளார். இவர் பயன்படுத்தி வந்த செல்போன் இணைப்பு கடந்த 2 மாதத்துக்கு முன்பு இரவு 12 மணியளவில் திடீரென துண்டிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் செல்போனில் ஏதாவது கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார். இதற்கிடையில் ஆறுமுகம் தனது வங்கிக்கணக்கை சரிபார்த்த போது அதில் இருந்து ரூ. 6 லட்சத்து 73 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் மர்ம ஆசாமிகள் பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:–

ஆறுமுகம் வங்கி கணக்குகளின் விவரங்களை ‘பிஷ்ஷிங் நெட்’ என்ற முறையில் மர்ம ஆசாமிகள் தெரிந்துகொண்டனர். எனவே அவருடைய கணக்கில் இருந்து நெட் பாங்கிங் மூலம் பணம் எடுக்க வேண்டும் என்றால் அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் ரகசிய எண் வரும். அந்த எண் இருந்தால் தான் பணத்தை எடுக்க முடியும்.

எனவே மோசடி ஆசாமிகள், ஆறுமுகத்தின் சிம் கார்டு தொலைந்து விட்டது என்று சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் மனு அளித்தனர். அதைஏற்று அன்று மாலையே செல்போன் நிறுவனம், அந்த செல்போன் எண்ணை உடனே முடக்கியது. பின்னர் அவர்கள் போலி ஆவணங்களை கொடுத்து, ஆறுமுகத்தின் எண் கொண்ட போலி சிம் கார்டை பெற்றுள்ளனர்.

பின்னர் நெட் பாங்கில் பணம் பரிமாற்றம் செய்யும் முறையில் ஆறுமுகத்தின் வங்கிக்கணக்கு இருந்து 5 நிமிட இடைவெளியில் ரூ.6 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றினர். ஆறுமுகத்தின் செல்போன் எண் தங்களிடமே இருந்ததால் அவர்கள் செல்போன் எண்ணுக்கு வந்த ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண்ணை (ஓ.டி.பி.) பார்த்து பணத்தை எளிதாக மற்றொரு கணக்கிற்கு மாற்றி உள்ளனர்.

வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த செல்போன் எண் இல்லாததால், வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது ஆறுமுகத்துக்கு உடனடியாக தெரியவில்லை. தற்போது அந்த வங்கிக் கணக் கில் இருந்து பணம் ஏதும் எடுக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறோம்.

போலீஸ் விசாரணையில் வங்கி பணபரிமாற்றத்துக்காக பயன்படுத்திய முகவரியில் காசியபாத் என்று மட்டுமே உள்ளது. வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மோசடி ஆசாமிகள் பணத்தை வடஇந்தியாவில் உள்ள போலி வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர். இதன் காரணமாக வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடிய சம்பவத்தில் வடமாநில ஆசாமிகளுக்கு தொடர்பு இருக்கலாமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்