இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கு வருவதை யாரும் தடுக்கமுடியாது; பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கு வருவதை யாரும் தடுக்கமுடியாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

Update: 2017-11-11 22:45 GMT

நெகமம்,

தமிழக அரசு சார்பில் பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி நெகமம் அரசு மேல் நிலப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் நஸ்ருதீன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் குமார் வரவேற்புரை ஆற்றினார். இதில் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு 94 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சியை உலக மக்கள் பாராட்டி வருகின்றனர். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது. இலவச மடிக்கணினி, சைக்கிள், காலணிகள், பாடப்புத்தகங்கள், போன்ற பல்வேறு வகையான வசதிகள் செய்து கொண்டு வருகிறது. ஆட்சியை பொறுத்தவரை மக்களுக்கான ஆட்சியாக நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. அது எந்த காலத்திலும் நடக்காது. மேலும் மு.க.ஸ்டாலின் தி.மு.க.தலைவர் பொறுப்புயை ஏற்க முடியவில்லை. பின்னர் எப்படி அவர் ஆட்சியை பிடிப்பார். எடப்பாடி அரசு குதிரை பேரஅரசு என்று கூறிவருகிறார். மு.க.ஸ்டாலின் அப்படி கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை. இதை அவர் மட்டும் தான் கூறிவருகிறார். அவர் தமிழக ஆட்சியை குறைகூற எந்த தகுதியும் இல்லை. எனவே இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்