பாளையங்கோட்டையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பட்டியல் வகுப்பு இனத்தவருக்கு துணை முதல்–அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-11-11 22:45 GMT

நெல்லை,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கண்மணிமாவீரன் தலைமை தாங்கினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், தமிழர் விடுதலை கள செயலாளர் மணிபாண்டியன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் போட்டனர்.

தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு துணை முதல்–அமைச்சர் பதவி வழங்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கக்கனுக்கு உள்துறை அமைச்சர் பதவியும், பரமேசுவரனுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. அதுபோல் தற்போதைய ஆட்சியில் முக்கிய இலகாவான துணை முதல்–அமைச்சர் பொறுப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் நற்பணிக்கழக நிர்வாகிகள் மதன், வெங்கடேஷ், நாம்தமிழர் கட்சியின் நிர்வாகிகள் நடராஜன், அழகுமுருகேஷ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஜமால், நயினார், தாமஸ், ரபீக், சாந்திஜாபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்