கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 3 குட்டிகள் தாய் சிறுத்தை கூண்டில் சிக்கியது வனப்பகுதியில் விடப்பட்டன

கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுத்தை குட்டிகளின் தாய் நேற்று வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் சிக்கியது.

Update: 2017-11-11 21:30 GMT

மண்டியா,

கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுத்தை குட்டிகளின் தாய் நேற்று வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் சிக்கியது. பின்னர் தாயும், 3 குட்டிகளும் ஒன்றாக வனப்பகுதியில் விடப்பட்டன.

3 சிறுத்தை குட்டிகள்

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை அருகே உள்ள கல்லனகெரே கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 சிறுத்தைக் குட்டிகள் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து விளையாடிக் கொண்டிருந்தன. பிறந்து சில நாட்களே ஆன அந்த குட்டிகளைப் பார்த்து கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த 3 சிறுத்தைக் குட்டிகளையும் மீட்டுச் சென்றனர்.

இதற்கிடையே குட்டிகள் கரும்பு தோட்டத்தில் இருந்ததால், அதன் தாய் இந்த பகுதியில்தான் இருக்க வேண்டும் என்றும், அது எப்படியும் குட்டிகளை தேடி வரும் என்றும் வனத்துறையினர் சந்தேகித்தனர். அதன்பேரில் கரும்பு தோட்டத்தின் அருகே தாய் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் இரும்பு கூண்டு வைத்தனர். மேலும் அங்கு ஒரு கண்காணிப்பு கேமராவையும் பொருத்தினர். அதன் வழியாக தாய் சிறுத்தை வருகிறதா என்று கண்காணித்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் நடமாட கிராம மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

கூண்டில் சிக்கிய தாய் சிறுத்தை

இந்த நிலையில் நேற்று காலையில் தாய் சிறுத்தை குட்டிகளைத் தேடி கரும்பு தோட்டத்திற்கு வந்தது. பின்னர் அது குட்டிகளை காணாமல் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்தது. பின்னர் அது வனத்துறையினர் வைத்திருந்த கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது. அதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அந்த தாய் சிறுத்தையை கூண்டுடன் மீட்டு காவேரி வனச்சரணாலயத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் வனத்துறையினர் அந்த தாய் சிறுத்தையுடன் 3 குட்டிகளையும் சேர்த்து அவற்றை வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்