ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் நிரப்பும் பணி

ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் நிரப்பும் நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மலர்தூவி தண்ணீரை வரவேற்றார்.

Update: 2017-11-11 10:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து, ராட்சத குழாய் மூலம் ஓசூர் நகரில் உள்ள ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் நிரப்பும் பணி நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்துகொண்டு, ஏரிக்கு நீர் வந்ததை மலர் தூவி வரவேற்றார். ராமநாயக்கன் ஏரியருகே நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பேசினார். ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா முன்னிலை வகித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கூறியதாவது:- ஓசூர் நகர் பகுதிக்கு குடிதண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்தது. அதை போக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு. ஓசூர் நகராட்சி சார்பில் ரூ.24.5 லட்சம் நிதியும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ரூ.25.5 லட்சம் நிதியும் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து நாளொன்றுக்கு 24 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படும்.

மேலும் ராமநாயக்கன் ஏரி பகுதியில், ஓசூர் மக்களின் நலன் கருதி சுற்றுலா வளர்ச்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படகு இல்லம் அமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல், குழந்தைகள் விளையாடும் வகையில் விளையாட்டு வசதிகள் செய்து தரப்படும். மேலும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 23.9.2017 அன்று கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவித்தவாறு, ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஏரிகளுக்கு கொடியாளம் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படஉள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். தமிழக முதல்-அமைச்சர், ஓசூர் மற்றும் மாவட்ட வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், தாசில்தார் பூசணகுமார், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஏ.மனோகரன், டி.வெங்கடரெட்டி, ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், மாவட்ட பாசறை தலைவர் மாரேகவுடு, கூட்டுறவு வங்கி தலைவர் எம்.நடராஜன், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.நாராயணன், டி.வி.எஸ். தொழிற்சங்க தலைவர் ஆர்.குப்புசாமி, ஐ.என்.டி.யூசி மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் ராமநாயக்கன் ஏரி முற்றிலும் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயரவேண்டும், ஓசூர் மக்களின் குடிநீர் தேவை முழுவதுமாக பூர்த்தியாக வேண்டும் என்று வேண்டி ராமநாயக்கன் ஏரியில் உள்ள துக்கலம்மா கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

வருகிற டிசம்பர் மாதம் தமிழக அளவில் பெண்களுக்கான கபடி போட்டி அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர், அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்