பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2017-11-11 09:00 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டிகோட்டை ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தும்பிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி, தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளி, புன்னம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி, புகளூர் ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 15 பள்ளிகளை சார்ந்த மொத்தம் ஆயிரத்து 391 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:- சிறந்த கல்வியாளர்களை கொண்ட கல்வி வல்லுநர் குழு அமைத்து மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எத்தகைய போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழக மாணவ- மாணவிகள் தயார்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிகநிதி ஒதுக்கி கணினி போன்ற விலையில்லா உபகரணங்களை வழங்கி மாணவ- மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தியதே காரணமாகும். இந்த கணினியை உயர் கல்விக்காக நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சார்ந்த மாணவ குழுவினர் உலகிலேயே மிகச்சிறிய அளவிலான 67 கிராம் எடைக்கொண்ட செயற்கை கோளை உருவாக்கி உலக அளவில் புகழ்பெற்று உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் 2016-2017-ம் கல்வியாண்டிற்கு 6 ஆயிரத்து 648 விலையில்லா மடிக்கணினிகள் வரப்பெற்றுள்ளது. அதில் முதற்கட்டமாக 21 பள்ளிகளை சார்ந்த ஆயிரத்து 875 மாணவ- மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், 2-ம் கட்டமாக 13 பள்ளிகளை சார்ந்த ஆயிரத்து 987 மாணவ- மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 46 லட்சத்து 38 ஆயிரத்து 800 மதிப்பிலும், 3-ம் கட்டமாக 13 பள்ளிகளை சார்ந்த ஆயிரத்து 395 மாணவ- மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 72 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 15 பள்ளிகளை சார்ந்த ஆயிரத்து 391 மாணவ- மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 72 லட்சத்து 48 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்றுடன் (நேற்று) மொத்தம் 6 ஆயிரத்து 648 மாணவ- மாணவிகளுக்கு ரூ.8 கோடியே 24 லட்சத்து 35 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், அ.தி.மு.க. (அம்மா) கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன், துணை செயலாளர் ஆர்.மோகன்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.ஜி.ஆர்.மனோகரன், ஒன்றிய செயலாளர் பி.குருசாமி, பள்ளப்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.ஏ.சையதுஇப்ராஹிம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, புஞ்சை புகளூர் பேரூராட்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தம்பிதுரை ஆகியோர் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

மேலும் செய்திகள்