மக்கள் நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
இலவச தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுவதையொட்டி கிராமப்புற ஏழை, எளிய மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம்,
சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி காஞ்சீபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் காஞ்சீபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் வரும் டிசம்பர் மாதம் 9-ந்தேதி இலவச தேசிய மக்கள் நீதிமன்றம் காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம்-2 ல் நடைபெற உள்ளது. இந்த இலவச நீதிமன்றம் மூலம் பணம் கொடுக்கல். வாங்கல் பிரச்சினை, சொத்துகள் குறித்த பிரச்சினை, சிவில் வழக்குகள், மேல் முறையீடு செய்தல், குற்றவியல் வழக்குகளில் ஜாமீன் எடுத்தல் உள்ளிட்ட பல வழக்குகளுக்கு இலவச தீர்வு காண முடியும். இந்த இலவச தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுவதையொட்டி கிராமப்புற ஏழை, எளிய மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. இந்த வாகனத்தை மாவட்ட நீதிபதி கருணாநிதி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி வேல்முருகன், சார்பு நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான பாக்கியஜோதி, முனிசிபல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயவேல், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சட்ட வட்ட பணிகள் வக்கீல்கள் அன்பழகன், சக்திவேல், கோபிநாத் ஆகியோர் மேற்கொண்டனர். இந்த வாய்ப்பை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட நீதிபதி கருணாநிதி கேட்டுக்கொண்டார்.