மும்பை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1¼ கோடி கடத்தல் தங்கம், செல்போன்கள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-11-10 22:34 GMT

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டு பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்கம் கடத்தல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 7–ந்தேதி இரவு கோலாலம்பூரில் இருந்து விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது, மலேசிய நாட்டை சேர்ந்த நூர் அனிஸ் பிந்தி முகமது, நூர் கஸ்வானி பிந்தி அப்ரஹிம் ஆகிய 2 பெண்களும், பாலாஜி என்பவரும் தங்கநகைகள் கடத்தி கொண்டு வந்து சிக்கினர்.

இவர்களிடம் இருந்து 36 வளையல்கள், 9 தங்கச்சங்கிலிகள் உள்ளிட்ட ரூ.51 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

செல்போன்கள் பறிமுதல்

இதுபோல் கடந்த 8–ந்தேதி வெளிநாட்டில் இருந்து வந்திறங்கிய ஒரு விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, 32 விலை உயர்ந்த செல்போன்களை கடத்தி வந்த கனடா நாட்டை சேர்ந்த நூருதின் பி.தோசானி என்பவர் கைதானார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.16 லட்சத்து 5 ஆயிரம் ஆகும்.

நேற்று முன்தினம் ஹாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் ரூ.53 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்த கொரியா நாட்டை சேர்ந்த ஜூயிங் அன், யங் எவே யூன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல நேற்று முன்தினம் துபாயில் இருந்து வந்த விமானத்தில் ரூ.11 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் கடத்தி வந்த சேக் சந்த்பி ‌ஷபாதுல்லா என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

மேற்படி 3 சம்பவங்களிலும் கைதான 7 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்