வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வாலாஜாபாத்,
சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, சாமியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 36). இவர் படப்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வாலாஜாபாத்தில் தனது குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் இவர் வாலாஜாபாத்தில் இருந்து படப்பைக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வாலாஜாபாத் அடுத்த குண்ணவாக்கம் பெட்ரோல் பங்க் அருகில் செல்லும்போது பின்னால் வந்த தனியார் நிறுவன பஸ் அவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் முகுந்தன் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மற்றொரு விபத்து
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா நாலுவாசன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (55). இவர் வாலாஜாபாத் அடுத்த மாத்தூரில் ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதே வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் குருசாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குருசாமியை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மேலும் ஒரு விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், வெங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன் (35). விவசாயி. இவர் தனது மனைவி சித்ராவுடன் (35) காஞ்சீபுரத்தில் இருந்து வெங்களத்தூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரம் அடுத்த கீழ்கதிர்ப்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய் அவரது மோட்டார் சைக்கிளின் குறுக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறி கோதண்டராமன் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.