10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவனம் உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு இங்கு கொள்ளை நடந்தது. இதில் 7 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீசார் அப்போது கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். 2007-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் ஆஜர் ஆக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இதில் பூந்தமல்லி அருகே உள்ள நேமம்புதுநகரை சேர்ந்த நேரு (49), எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மணிவண்ணன் (39) ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். மற்ற 5 பேர் மட்டும் கோர்ட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
தலைமறைவாக இருந்த 2 பேரை ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் பெரியபாளையம் போலீசார் 10 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த நேரு, மணிவண்ணன் இருவரையும் கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.