சென்னை வேளச்சேரியில் விவேக்குக்கு சொந்தமான திரையரங்கில் காட்சிகள் ரத்து

வேளச்சேரியில் விவேக்குக்கு சொந்தமான திரையரங்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை செய்தனர். இதனால் நேற்றும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Update: 2017-11-10 23:30 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு மையத்தில் இளவரசியின் மகன் விவேக்குக்கு சொந்தமான ‘லக்ஸ் சினிமாஸ்’ உள்ளது. இங்கு 12 திரைகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு வரை இந்த திரையரங்கில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் நேற்று முன்தினம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

காட்சிகள் ரத்து

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி வேணுகோபால் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் திரையரங்குக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனால் 2-வது நாளாக நேற்றும் 12 திரைகளிலும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் திரையரங்குகளில் படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சோதனை நடக்கும் தகவல் தெரிந்ததால் நேற்று குறைந்த அளவு ரசிகர்களே வந்து இருந்தனர்.

திரையரங்கு உள்ளே செல்லும் நுழைவு வாயிலில் தடுப்பு ஏற்படுத்தி காவலுக்கு நின்றிருந்த திரையரங்க ஊழியர்கள், சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆன்- லைனில் பதிவு செய்தவர்களுக்கு அந்த பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் கூறி ரசிகர்களை அனுப்பி வைத்தனர்.

சோதனை முடிந்தது

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள், திரையரங்கில் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது அவர்கள், சில முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்