சாலை போக்குவரத்து கழக டிரைவர்கள் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களை ஓட்டுவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்; கவர்னர் உத்தரவு
புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக டிரைவர்கள் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களை ஓட்டுவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள் பலர் அரசியல்வாதிகளின் சொந்த வாகனங்களை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கவர்னர் கிரண்பெடிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரில் புதுவை சாலை போக்குவரத்து கழக டிரைவர்கள் 37 பேர் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களை ஓட்டுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து துறை ஆணையருக்கு, கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். மேலும் துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு இது உண்மையா? என உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு அனுமதி வழங்கியது யார்? அந்த டிரைவர்களுக்கு யாருடைய பணம் சம்பளமாக வழங்கப்படுகிறது? எந்தெந்த டிரைவர்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுனர்களாக பணிபுரிகின்றனர்? என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
இது உண்மையாக இருந்தால் அதற்கு புதுவை சாலை போக்குவரத்து கழக பொதுமேலாளரும், போக்குவரத்து துறை ஆணையரும் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.