பகல் முழுவதும் கொட்டி தீர்த்த மழை மாணவ–மாணவிகள் கடும் அவதி

புதுவையில் நேற்று பகல் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளிக்குச் சென்ற மாணவ–மாணவிகள் கடும் அவதிப்பட்டனர்.

Update: 2017-11-10 22:15 GMT

புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதன் பின்னர் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. புதுவையில் உள்ள ஏரிகள் நிரம்பின.

இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானினை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுவையில் நேற்று அதிகாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதல் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை மதியம் வரை நீடித்தது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகள் சிலர் குடைகளை பிடித்த படியும், மழைக்கோட்டு அணிந்த படியும் சென்றனர். சிலர் மழையில் நனைந்த படியே சென்றனர்.

இந்த நிலையில் பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்ட இருந்தது. மாலையில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ–மாணவிகள் மழையில் நனைந்த படியே வீடு திரும்பினர். தொடர் மழையால் நேற்று பகல் முழுவதும் புதுவை கடற்கரை சாலை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

புதுவை நகர பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. வெளிமாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள், விடுதி அறைகளிலேயே முடங்கி இருந்தனர்.

இந்த தொடர் மழையால் ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், பாவாணர் நகர், செயின்பால் பேட், பூமியான்பேட் உள்பட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் இணைந்து மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றினர்.

தொடர் மழையால் நேற்று மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். புதுவையின் புறநகர் பகுதிகளான அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, காலாப்பட்டு ஆகிய பகுதிகளிலும் பகல் முழுவதும் மழை கொட்டியது.

இந்த நிலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மழைநீர் தேங்கிநின்ற பகுதிகளுக்கு சென்று மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்