கன மழையால் தண்ணீர்வரத்து அதிகரித்து பாகூர் பகுதியில் மேலும் 4 ஏரிகள் நிரம்பின
பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து மேலும் 4 ஏரிகள் நிரம்பின. பாகூர் மற்றும் சுற்றுவட்டார ஏரிகளில் 393 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.
பாகூர்,
புதுவை மாநிலம் பாகூர் பகுதியில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக தாழ்வான பகுதியில் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. நெற்பயிர்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுகிவந்தது. அதனால் அரசும் விவசாயிகளும் இணைந்து விளைநிலங்களில் புகுந்த மழைநீரை வெளியேற்றினர். மேலும் அழுகிய நெற் பயிருக்கு பதிலாக வேறு நாற்றுகள் வாங்கி நட்டனர்.
தொடர்மழையின் காரணமாக பாகூரை சுற்றியுள்ள சித்தேரி, மணப்பட்டு ஏரி, சேலியமேடு ஏரி, பின்னாச்சிகுப்பம் ஏரி, குருவிநத்தம் ஏரி, இருளன்சந்தை ஏரி, சோரியாங்குப்பம் ஏரி உள்ளிட்ட 19 ஏரிகள் ஏற்கனவே நிரம்பி உபரி நீர் வடிவாய்க்கால்களின் வழியாக வெளியேறி மற்ற ஏரிகளுக்கு சென்றன.
இந்த நிலையில் பாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை கன மழை பெய்தது. பின்னர் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக தண்ணீர்வரத்து மேலும் அதிகரித்து பாகூர் பகுதியில் மேலும் 4 ஏரிகள் நிரம்பின.
இந்த மழையால் பரிக்கல்பட்டில் 2 ஏரிகள், கிருமாம்பாக்கம் சின்ன ஏரி, உச்சிமேடு ஏரி ஆகிய 4 ஏரிகள் நிரம்பின. இதன் மூலம் பாகூர் பகுதியில் மொத்தம் 23 ஏரிகள் நிரம்பி உள்ளன.
பாகூர் ஏரியின் மொத்தம் உள்ள 12 அடி கொள்ளளவில் தற்போது 9 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி 24 ஏரிகளில் 393 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 7 மாதங்களுக்கு இந்தநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என பொதுப்பணித்துறை உதவி பொறியளார் சங்கர் தெரிவித்துள்ளார்.
இதைபோல நெட்டபாக்கம் நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 31 ஏரியில் ஏம்பலம், பெருங்களுர் பகுதியில் உள்ள 5 ஏரிகள் நிரமபியுள்ளன.
பாகூர் பொதுப்பணி துறை நீர் பாசன பிரிவு சாரிபில் பெக்லைன் இயந்திரம் மூலம் வரத்து மற்றும் வரத்து வாய்க்கால்கள் வேகமாக தூர்வரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபுறம் அச்சமும் அடைந்துள்ளனர்.