தேரூர் இரட்டைக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்ய வேண்டும்

தேரூர் இரட்டைக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்ய வேண்டும் என்று சுட்டுக்கொல்லப்பட்ட வன ஊழியரின் மகன் மற்றும் மகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2017-11-10 23:15 GMT

நாகர்கோவில்,

சுசீந்திரத்தை அடுத்த தேரூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வனத்துறை ஊழியர். இவருடைய மனைவி யோகீஸ்வரி. இவர்கள் 2 பேரும் கடந்த 2011–ம் ஆண்டு நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தேரூர் அருகே சென்றபோது 2 பேரையும் ஒரு கும்பல் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஆறுமுகம், யோகீஸ்வரி ஆகியோருடைய மகன் முத்துக்குமார் தலைமையில், அவருடைய சகோதரி அனுஷா மற்றும் உறவினர்கள் பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் முத்துக்குமார் கூறியிருப்பதாவது:–

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் தேரூர் பேரூராட்சியில் வசித்து வருகிறோம். எனது தந்தை ஆறுமுகம் மற்றும் தாயார் யோகீஸ்வரி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சுசீந்திரம் அருகில் உள்ள அக்கரை பகுதியில் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டனர். சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதன் அடிப்படையில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

எனது தந்தை ஆறுமுகம் மற்றும் தாயார் யோகீஸ்வரியை கொலை செய்வதற்காக கொலையாளிகள் பயன்படுத்திய அரசு தோட்டா மற்றும் துப்பாக்கி என விசாரணை அதிகாரிகள் எங்களிடம் அதை காண்பித்து கூறினார்கள். தற்போது விசாரணை அதிகாரிகளில் சிலர் எனது தந்தை ஆறுமுகம் மற்றும் தாயார் ஈஸ்வரி உடலில் இருந்து எடுத்த தோட்டாவும், விசாரணை அதிகாரிகள் கூறிய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியும் பொருந்தவில்லை என்றும் கூறி வருகிறார்கள். எனது தாய் மற்றும் தந்தை இறப்பதற்கு எனது தாயின் பெயரில் இருந்த புத்தேரி ஊரில் 75 சென்ட் இடத்துக்காகத்தான் கொலை நடைபெற்றதாக அப்போதைய விசாரணை அதிகாரிகள் கூறினார்கள்.

விசாரணை அதிகாரிகள் கூறுவது போல் எனது தாய் பெயரில் எந்த சொத்து ஆவணங்களும் புத்தேரியில் கிடையாது. மேலும் விசாரணை அதிகாரிகள் கூறும் குற்றவாளிகளுடனும் எந்த கொடுக்கல், வாங்கலும் எந்த பகையும் கிடையாது. மேலும் சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த விசாரணையும் முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் செயல்படுத்திய அனைத்து சம்பவங்களும் முன்னுக்கு புறம்பாக உள்ளது. இந்த வழக்கை வேகமாக முடிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் விசாரணை அதிகாரிகள் செயல்பட்டார்களே தவிர எங்களுக்கு நீதி, நியாயம் கிடைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 6 ஆண்டுகள் காலம் காத்திருந்தோம், இதுவரை இந்த வழக்கில் உண்மை நிலவரம் தெரியவில்லை. இன்று வரை அரசும், எங்களுக்கு என் தந்தை பணிபுரிந்த வனத்துறை சரகத்தில் இதுவரை அரசு பணியும் தரவில்லை. இன்று வரை கண்ணீரும், கவலையுடன் தான் வாழ்ந்து வருகிறோம். எனவே தயவுகூர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றினால் மட்டும் தான் நீதி கிடைக்கும். எனவே தாங்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க கூட்டமைப்பு தமிழ்நாடு தலைவர் வக்கீல் செலஸ்டின், சங்க மாவட்ட பொதுச்செயலாளர் அந்தோணி, நிர்வாகிகள் அலெக்சாண்டர், என்.அந்தோணி உள்பட பலர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

வனத்துறை ஊழியர் ஆறுமுகம், அவருடைய மனைவி யோகீஸ்வரி இரட்டைக் கொலை வழக்கில் 6 ஆண்டுகள் ஆகியும் புலன் விசாரணை முறையாக நடத்தி காவல்துறை கோர்ட்டில் சமர்ப்பிக்காததால் பல சந்தேகங்கள் இருப்பதாக குமரி மாவட்ட மக்களும், நாங்களும் சந்தேகப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலைமையை சரி செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில், நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல் நேர்மையான விசாரணை செய்து குற்றபத்திரிகையை கோர்ட்டில் சமர்ப்பிக்க இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற சிபாரிசு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்