வெளிநாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேச்சு

வெளிநாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று ஆட்சிமொழி கருத்தரங்கில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

Update: 2017-11-10 22:30 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் தமிழ்வளர்ச்சிதுறை சார்பில் அரசு அதிகாரிகளுக்கான ஆட்சிமொழி கருத்தரங்கம் நடந்தது.

 இதற்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம், தமிழ்மொழி வளர்ச்சிக்கென்று பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் தமிழுக்கென்று தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்துத்துறை அலுவலர்களும், தமிழில் குறிப்புகளை எழுத வேண்டும். மேலும் பயிற்சியில் வழங்கிய கருத்துகளை மனதில் நிறுத்தி கொள்வதோடு, நடைமுறையில் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு போட்டி, கவிதை போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த மாணவ–மாணவிகளுக்கு பரிசு தொகையாக ரூ.10 ஆயிரமும், 2–வது இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், 3–வது இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் என காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதி முதல் இடம் பிடித்த அரசு பணியாளர்களுக்கு பரிசுதொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ தலைமையில், ஆட்சிமொழி பயிலரங்கம் நடைபெற்றது. இதில் கணினி மென்தமிழ்ச்சொல்லாளர் குறித்து பேராசிரியர் தெய்வசுந்தரமும், ஆட்சிமொழி செயலாக்க அரசாணைகள் குறித்து திருச்சி மாவட்ட தமிழ்வளர்ச்சி துணை இயக்குனர் துரை தம்புசாமியும் விளக்கவுரையாற்றினார்கள். முன்னதாக, குமரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பசும்பொன் வரவேற்று பேசினார். சாகித்ய அகடமி விருது பெற்ற பொன்னீலன், உலகத்தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாசினி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்