புதிய கட்டிடத்தை திறக்கக்கோரி மாணவ–மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்
மாதனூர் அருகே ரூ.1½ கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறக்ககோரி மாணவ–மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஆம்பூர்,
மாதனூர் ஒன்றியம், பள்ளிகுப்பம் கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்திலேயே செயல்பட்டு வந்தது. உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.1 கோடியே 61 லட்சம் நிதிஒதுக்கி கட்டிடப்பணியும் முழுமையாக முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றார். 8 வாரத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், 8 மாதங்கள் ஆகியும் வழக்கு முடியாத நிலையில் இருந்தது.
தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறைகள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள், ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் பாடம் நடத்தினால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கோரி நேற்று போராட்டததில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடத்தில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை புதிய கட்டிடத்திற்கு அழைத்து சென்று பள்ளி கட்டிட திறப்பு விழாவை நடத்தி வகுப்பறைகளில் உட்கார வைத்தனர்.
தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் நிலுவையில் உள்ள வழக்கை நீதிமன்றம் விரைந்து முடித்து மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி கற்க நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.