சாலை விரிவாக்க பணிக்காக வீட்டை இடிக்க எதிர்ப்பு; மகனுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

சாலை விரிவாக்க பணிக்காக வீட்டை இடிக்க முயன்ற போது, கூடுதல் நிவாரணம் தரக்கோரி மகனுடன் தாய் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2017-11-10 23:00 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பியூலா (வயது 38). இவர்களுக்கு பிரித்தம்(16), நிஷாந்த்(12) என்ற 2 மகன்கள் உள்ளனர். பியூலாவின் வீடு விருத்தாசலம் பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தற்போது இந்த சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், சாலையோரம் நெடுஞ்சாலை துறையினரால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சாலையோரம் இருந்த பியூலாவின் வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்தனர். அப்போது எனது வீட்டுக்கு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கியது போல் தனக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி வீட்டை இடிக்க விடாமல் அதிகாரிகளை தடுத்து நிறுத்தினார்.

இதுகுறித்து அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளிதர், உதவி கோட்ட பொறியாளர் செந்தில் மற்றும் விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து வந்து, பியூலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீட்டை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரம் வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பியூலா, வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றினார். மேலும் அருகில் இருந்த நிஷாந்தின் மீதும் மண்எண்ணெயை ஊற்றினார். பின்னர் தனது மகன் நிஷாந்திடம் தீப்பெட்டியை எடுத்து வருமாறு கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் நிஷாந்தை தடுத்து நிறுத்தினார்கள்.

இதையடுத்து உரிய நிவாரணம் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். அதற்கு பியூலா, கூடுதலாக நிவாரணம் வழங்கினால் தான் வீட்டை இடிக்க விடுவேன் என்று தெரிவித்தார். இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். மகனுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்