திப்பு ஜெயந்தியை எதிர்த்து குடகு மாவட்டத்தில் முழு அடைப்பு தடையை மீறி பா.ஜனதாவினர் போராட்டம்

திப்பு ஜெயந்தி விழாவை எதிர்த்து குடகு மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.;

Update: 2017-11-10 22:00 GMT

குடகு,

திப்பு ஜெயந்தி விழாவை எதிர்த்து குடகு மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போலீசாரின் தடையை மீறி பா.ஜனதாவினரும், இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. முழுஅடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

திப்பு ஜெயந்தி விழா

கர்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக திப்பு ஜெயந்தி விழா மாநில அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 10–ந்தேதி (அதாவது நேற்று) அரசு சார்பில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்படும் என்று ஏற்கனவே மாநில அரசு அறிவித்திருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.

திட்டமிட்டபடி குடகு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடகு மாவட்டத்தில் பா.ஜனதாவினர் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தள்ளுமுள்ளு

இந்த நிலையில் நேற்று குடகு மாவட்ட நிர்வாகம் சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோட்டை வளாகத்தில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழா நடைபெற இருந்த கோட்டை வளாகத்தை பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் மடிகேரி புறநகர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். அப்போது பா.ஜனதாவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் போலீஸ் வாகனத்தில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தினர்.

மரியாதை

இதேபோல் கோட்டை பகுதியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் ரிச்சர்ட் வின்சென்ட் டிசோசா, கூடுதல் டி.ஜி.பி. பாஸ்கர் ராவ், வீணா அச்சய்யா எம்.எல்.சி. உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு திப்பு சுல்தான் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது விழாவில் கலந்து கொண்ட பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன், எம்.எல்.சி சுனில் சுப்பிரமணி ஆகியோர் விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதைதொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சனையும், எம்.எல்.சி சுனில் சுப்பிரமணியையும் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கே.ஜி.போப்பய்யா எம்.எல்.ஏ. கைது

இதேபோல் விராஜ்பேட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வந்த பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ. கே.ஜி.போப்பய்யா கோ‌ஷங்கள் எழுப்பினார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது அலுவலகம் முன்பு கூடி இருந்த அவருடைய ஆதரவாளர்களும், இந்து அமைப்பினரும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து கே.ஜி.போப்பய்யா உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50–க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் குஷால்நகர் டவுன் கணபதி கோவில் அருகே நடந்த திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்தனர்.

பெரும்பாலான கடைகள் அடைப்பு

திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழுஅடைப்பு போராட்டத்திற்கு பா.ஜனதா கட்சியினர் ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால் நேற்று பல இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மேலும் சித்தாப்புரா, நெல்லி உதுக்கேரி, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் மட்டும் சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

மேலும் மாவட்டம் முழுவதும் ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின. ஆனால் தனியார் பஸ்கள் ஓடவில்லை. குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

அரசு பஸ் மீது கல்வீச்சு

இந்த நிலையில் நேற்று மடிகேரியில் இருந்து காலூரு நோக்கி சென்ற அரசு பஸ் மீது சில மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. இதுகுறித்து மடிகேரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடகு மாவட்டத்தில் மடிகேரி, குஷால்நகர், சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை, குஷால்நகர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000–க்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்