கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க கிராமங்களில் கண்காட்சி நடத்தப்படும்

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க கிராமங்களில் கண்காட்சி நடத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2017-11-10 22:15 GMT

திண்டுக்கல்,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிறுவன நாள் விழா மற்றும் கால்நடை, கோழிப்பண்ணையாளர்கள் தினவிழா ஆகியவை திண்டுக்கல்லில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் மற்றும் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ஹரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–

ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் கால்நடை துறையின் பங்கு 4.31 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு தமிழகத்தின் பால் உற்பத்தி 75 லட்சத்து 56 ஆயிரம் டன்களாக உயர்ந்துள்ளது. இதேபோல முட்டை உற்பத்தி 1,668 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 63 ஆயிரத்து 448 மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தினமும் 2 லட்சத்து 66 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ரூ.6 கோடியே 34 லட்சம் மதிப்பில் அம்மா நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்திகள் திட்டம் தொடங்கப்பட்டு திருச்சி, தஞ்சை, நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்பை ஊக்குவித்தல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில், வாரந்தோறும் கிராமங்களில் கண்காட்சி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், ‘தானுவாஸ் அசில்’ என்ற புதிய கோழி இனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, சிறந்த விவசாயிகள், சிறந்த கறவை மாட்டு பண்ணையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதேபோல சிறந்த கல்லூரி, பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு குறித்து 40–க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், பர்கூர், காங்கேயம், புலிகுளம் ஆகிய இன மாடுகள் மற்றும் ஆடுகள் இடம்பெற்றிருந்தன. இதனை அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் நேரில் பார்வையிட்டனர்.

விழாவில் திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்