வேலை பார்த்த வீட்டு அறையில் தூங்கியபோது ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி தம்பதி சாவு

கொடைக்கானலில், வேலை பார்த்த வீட்டின் அறையில் தூங்கியபோது, ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-11-10 23:00 GMT

கொடைக்கானல்,

நேபாள நாட்டை சேர்ந்தவர் சர்மா (வயது 63). இவருடைய மனைவி குமாரி (40). இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்துக்கு வந்தனர். பின்னர் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு கி‌ஷன், கிஷோர், கிருஷ்ணா ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் கி‌ஷன் சமையல் தொழிலாளியாக உள்ளார். மற்ற இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.

சர்மா பாம்பார் ரோட்டில் உள்ள ஒரு பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்தார். அதன் அருகில் உள்ள மற்றொரு பங்களாவில் குமாரி சமையல் வேலை செய்து வந்தார். சர்மா வேலை பார்க்கும் பங்களாவில் அவர் தங்குவதற்கு தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் அவர் தனது மனைவியுடன் தங்கியிருந்தார். மகன்கள் 3 பேரும் நாயுடுபுரத்தில் உள்ள வீட்டில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்–மனைவி இருவரும் அந்த தங்களது அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ஜெனரேட்டர் அறைக்கு சென்ற தம்பதி, அதனை இயக்கி உள்ளனர். மின்சாரம் வந்ததும் ஜெனரேட்டர் இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்பதால் பக்கத்து அறையில் படுத்து தூங்கினர். ஜெனரேட்டரில் இருந்து வரும் புகையை கட்டிடத்துக்கு வெளியே கொண்டு செல்லும் குழாய் இந்த அறை வழியாக தான் செல்கிறது.

நேற்று காலை 8 மணி வரை ஜெனரேட்டர் இயங்கிய நிலையில் இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பக்கத்து அறையில் தூங்கிகொண்டிருக்கும் சர்மாவை எழுப்புவதற்காக அறையின் கதவை தட்டினர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்தபோது, அந்த அறை முழுவதும் புகை மண்டலமாக இருந்தது. படுக்கை அறையில் தம்பதியினர் பிணமாக கிடந்தனர்.

பின்னர் பிணங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த அறையில் ஜெனரேட்டரில் இருந்து வந்த புகையை வெளியேற்றுவதற்காக பொருத்தப்பட்ட குழாயில் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் புகை பரவியதும், இதில் மூச்சுத்திணறி கணவன்–மனைவி இருவரும் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பதி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்