தூத்துக்குடி, கோவில்பட்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி, கோவில்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-11-10 20:30 GMT
தூத்துக்குடி,

அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி, கோவில்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் சிவசூரியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் 7-வது ஊதியக்குழுவில் கிராமிய தபால் ஊழியர்களுக்கு அரசால் அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையில், சாதகமான பரிந்துரைகளை விரைந்து அமல்படுத்த வேண்டும், தபால் இலாகாவை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கை கண்டிப்பது, வேலை பளுவை காரணம் காட்டி சம்பள குறைப்பு செய்து வாங்கிய சம்பளத்தில் பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க உதவி பொருளாளர் சுந்தரம், உதவி செயலாளர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராமிய தபால் ஊழியர் சங்க கிளை தலைவர் ராஜேசுவரன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பிச்சையா, கிருஷ்ணசாமி, நாறும்பூநாதன், தினகரன், துரை, பட்டுராஜன், கந்த வேலம்மாள், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்