மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கைது ஆசிரியருக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசி அருகே மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2017-11-10 20:30 GMT

தென்காசி,

தென்காசி அருகே மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இலஞ்சியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் ஆண், பெண் இருபாலரும் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவிகளுக்கு டியூசன் சொல்லி கொடுப்பதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து தமிழ் ஆசிரியர் ராஜூ என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவிகள், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஆறுமுகத்திடம் முறையிட்டனர். மாணவிகளின் புகார் தொடர்பாக தலைமை ஆசிரியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

மாணவர்கள் போராட்டம்

இதற்கிடையே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலையில் மாணவ–மாணவிகள் பள்ளிக்கூட வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோரும் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் போராட்டம் கைவிடப்பட்டது.

தலைமை ஆசிரியர் கைது

இதற்கிடையே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மாணவி ஒருவர் குற்றாலம் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், மாணவிகள் புகார் கூறியும் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமலும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலும் இருந்த தலைமை ஆசிரியர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஆசிரியர் ராஜூவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்