இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை நண்பர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை

இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.;

Update: 2017-11-09 22:00 GMT

மும்பை,

மும்பை காட்டன்கிரீன் பகுதியில் உள்ள லாரிகள் நிறுத்தப்படும் இடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு லாரி அருகே ராகுல் மண்டல், பஞ்சுதாக்கி ஆகிய வாலிபர்கள் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அந்த லாரிக்குள் சலீம் சேக் என்ற வாலிபர் ஒருவர் ஒரு இளம்பெண்ணை கற்பழித்து கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் மூன்று வாலிபர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண், தன்னை வாலிபர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்தேரியில் இருந்து கடத்தி வந்து கற்பழித்ததாக போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மரபணு சோதனையில் சலீம் சேக் மட்டும் தான் அந்த இளம்பெண்ணை கற்பழித்து இருந்தது தெரியவந்தது.

இளம்பெண்ணை கடத்துவதற்கு மற்ற வாலிபர்கள் இருவரும் உதவி செய்து உள்ளனர். அவர்கள் மீது போலீசார் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, வாலிபர்கள் 3 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது இளம்பெண்ணை கற்பழித்த சலீம் சேக்குக்கு கோர்ட்டு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இளம்பெண்ணை கடத்துவதற்கு உதவிய அவரது நண்பர்களான மற்ற இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்