கந்து வட்டி வசூலித்த பெண் உள்பட 2 பேர் கைது
கந்து வட்டி வசூலித்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த எலப்பாக்கம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி தேன்மொழி (வயது 44). அதே பகுதியை சேர்ந்த ஜீஜிபாய் என்பவருக்கு ரூ.45 ஆயிரம் கடன் கொடுத்திருந்தார். ஜீஜிபாய் வட்டியுடன் சேர்த்து ரூ.66 ஆயிரத்து 900 தேன்மொழிக்கு கொடுத்தார். அப்போது தேன்மொழி வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சம் வருகிறது. ரூ.66 ஆயிரத்து 900 போக மீதி பணத்தை தர வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து ஜீஜிபாய் ஒரத்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்து வட்டி வசூலித்ததாக தேன்மொழியை கைது செய்தனர்.
மாதர்பாக்கம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் சத்தியவேடு சாலையை சேர்ந்தவர் அழகேசன்(46). வேன் டிரைவர். இவர் மாதர்பாக்கத்தை சேர்ந்த கிஷோர்(41) என்பவரிடம் கடன் தொகையாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வாங்கினார். அதற்கு வட்டியாக அழகேசன் மாதாமாதம் ரூ.6 ஆயிரம் கொடுத்து வந்தார். கடந்த 3 மாதங்களாக வட்டி செலுத்த வில்லை. கிஷோர் வட்டி பணத்தை தருமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
இது குறித்து அழகேசன் பாதிரிவேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்தார்.