குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டுப்போட்ட பொதுமக்கள்

குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் பூட்டுப்போட்டனர்.

Update: 2017-11-09 21:30 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்தது அம்மையார்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சிவலிங்கபுரம் பகுதியில் 150 வீடுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்த பகுதியில் குடிநீர் ஏற்றும் மின்மோட்டார் பழுதாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிவலிங்கபுரம் பகுதி மக்களுக்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இது குறித்து புகார் தெரிவிக்க அந்த பகுதி மக்கள் அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருக்க வேண்டிய ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் அங்கு இல்லை. அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் திரும்பி வந்த பொதுமக்கள் மறுநாளும் சென்று பார்த்த போது அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது.

முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த சிவலிங்கபுரம் பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குடிநீர் வழங்காத ஊராட்சியை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

மேலும் பூட்டி கிடந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தை சிவலிங்கபுரம் பகுதி மக்கள் மேலும் ஒரு பூட்டை போட்டு பூட்டினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் கிடைத்ததும் ஊராட்சி மன்ற செயலாளர் விஸ்வநாதன் விரைந்து சென்று பொதுமக்களை சந்தித்து டிராக்டர்கள் மூலம் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்