வீட்டின் அருகே மேய்ந்த மாடுகள் மீது திராவகம் வீசிய ரேஷன் கடை ஊழியர் கைது துப்பாக்கி பறிமுதல்

வீட்டின் அருகே மேய்ந்த மாடுகள் மீது திராவகம் வீசிய ரேஷன் கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-11-09 23:15 GMT
திருச்சி,

திருச்சி உறையூர் லிங்கநகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). இவருக்கு சொந்தமாக குழுமணிரோடு மங்களா நகரில் காலி மனை உள்ளது. இந்த மனையில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைத்து அங்கு தனது 4 மாடுகளை கனகராஜ் கட்டி வைத்துள்ளார். அந்த மாடுகள் அவ்வப்போது அதே பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும். ஆனால் இதற்கு அதே பகுதியில் வசித்து வரும் ரேஷன்கடை ஊழியர் பாலாஜி(52) எதிர்ப்பு தெரிவித்தார். தனது வீட்டின் முன்பு மாடுகள் மேய விடக்கூடாது என்றும் எச்சரித்து வந்தார்.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு மாடுகளின் உடலில் வெந்துபோன காயங்கள் இருந்ததை கனகராஜ் கண்டார். இதேபோல் உறையூர் காளையன்தெருவை சேர்ந்த ஒருவரது 2 கன்று குட்டிகள் மீதும், உறையூர் வடிவேல்நகரை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் 2 மாடுகள் மீதும் காயங்கள் இருந்தன. இதனை கண்ட மாடுகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து சோதித்து பார்த்தனர்.

அப்போது மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் மீது திராவகம் வீசப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாலாஜியிடம் சென்று தட்டி கேட்டனர். ஆனால் பாலாஜி அவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். உடனே இது குறித்து கனகராஜ் உறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து, பாலாஜியை கைது செய்தார். மேலும், அவரிடம் இருந்து பாட்டில்களில் இருந்த திராவகத்தையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தார். 

மேலும் செய்திகள்