கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு டிக்கெட் இல்லை குமாரசாமி பேட்டி

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு டிக்கெட் இல்லை என்று குமாரசாமி கூறினார்.

Update: 2017-11-09 21:15 GMT

சிவமொக்கா,

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு டிக்கெட் இல்லை என்று குமாரசாமி கூறினார்.

விவசாய கடன் தள்ளுபடி

ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதாவது அவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தில் தொண்டர் ஒருவரின் வீட்டில் தங்கி அவர்களுடன் உரையாடுகிறார். அவர் நேற்று சிவமொக்கா மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

காங்கிரஸ் தலைவர்கள் அரசு பணத்தை கொள்ளையடித்து சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பினாமி வங்கி கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். மாநில அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் கூட்டுறவு வங்கிகளுக்கு அந்த பணத்தை அரசு கொடுக்கவில்லை. அடுத்து புதிதாக வரும் அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தவே விவசாய கடனை சித்தராமையா தள்ளுபடி செய்துள்ளார்.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்

மத்திய அரசு வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. அமைப்பை தவறாக பயன்படுத்துகிறது. அதே போல் கர்நாடக அரசு ஊழல் தடுப்பு படையை துஷ்பிரயோகம் செய்கிறது. நான் பெயருக்காக கிராமங்களில் தங்கவில்லை. என்னை பற்றி சித்தராமையா தரக்குறைவாக பேசுவதை நிறுத்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் எனது உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் இந்த பயணத்தை தொடங்கியுள்ளேன். பணம் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது தான் எனது நோக்கம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

பிரஜ்வலுக்கு டிக்கெட் இல்லை

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா ஹாசன் மாவட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்த முறை சட்டசபை தேர்தலில் எனது மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடுவார் என்று கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தேவேகவுடா, நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுபற்றி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் எங்கள் குடும்பத்தில் இருந்து 2 பேர் மட்டுமே போட்டியிடுவார்கள். அதனால் பிரஜ்வலுக்கு டிக்கெட் கொடுக்க மாட்டோம்“ என்றார்.

மேலும் செய்திகள்