திப்பு ஜெயந்திக்கு எதிராக பெங்களூருவில் ஊர்வலம் நடத்த தடை போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் பேட்டி

திப்பு ஜெயந்திக்கு எதிராக பெங்களூருவில் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2017-11-09 21:00 GMT

பெங்களூரு,

திப்பு ஜெயந்திக்கு எதிராக பெங்களூருவில் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஊர்வலம் நடத்த தடை

அரசு சார்பில் மாநிலம் முழுவதும் நாளை(அதாவது இன்று) திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. திப்பு ஜெயந்திக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. இதையொட்டி, பெங்களூருவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க முன் எச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திப்பு ஜெயந்திக்கு எதிராக ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, திப்பு ஜெயந்திக்கு ஆதரவாக ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்கவில்லை.

பெங்களூரு நகரில் அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதில் திப்பு ஜெயந்திக்கு ஆதரவாளர்கள் கலந்து கொள்ளலாம். விழா நடைபெறும் பகுதிகளுக்கு முன்பாக போராட்டங்களில் ஈடுபட அனுமதி கிடையாது.

11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

திப்பு ஜெயந்தியையொட்டி பெங்களூருவில் கூடுதல் போலீஸ் கமி‌ஷனர்கள், துணை கமி‌ஷனர்கள், உதவி கமி‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், 30 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை, 25 பிளட்டூன் நகர ஆயுதப்படை, கருடா போலீஸ் படையினர், ஊர்காவல் படையினர் என 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நகரில் உள்ள அனைத்து போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

திப்பு ஜெயந்தியையொட்டி பெங்களூருவில் 144 தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. தேவைப்பட்டாலோ, நிலைமையை கருத்தில் கொண்டோ 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம். மேலும் முன் கூட்டியே யாரையும் கைது செய்யவில்லை.

இவ்வாறு போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்