கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெங்களூரு,
கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வருமான வரி சோதனைசென்னை உள்பட தமிழ்நாட்டில் அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொந்தமாக உள்ள வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் டி.டி.வி.தினகரனின் வீடு, அலுவலகங்கள், அவருடைய உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு ஆதரவு அளித்து வரும் கட்சி நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட மொத்தம் 160 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
மேலும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்கள் என 27 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
கர்நாடகத்தில், பெங்களூரு முருகேஷ்பாளையாவில் வசித்து வரும் கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் வா.புகழேந்தியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதற்காக நேற்று காலை 7 மணியளவில் 2 கார்களில் வருமான வரி அதிகாரிகள் 11 பேர் வா.புகழேந்தியின் வீட்டுக்கு வந்தனர். அந்த கார்களை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, அதிகாரிகள் 2–வது மாடியில் உள்ள புகழேந்தியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர்.
செல்போன்களை...கதவை திறந்ததும், வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். தங்களின் அடையாள அட்டையை காட்டி தாங்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாகவும், உங்கள் வீட்டில் சோதனை நடத்த ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து புகழேந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டனர். வீட்டின் கதவும் மூடப்பட்டது.
அந்த வீட்டுக்கு வெளியே கர்நாடக போலீசார் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். வீட்டிற்குள் இருக்கும் பீரோக்கள் முழுவதையும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கட்டிலில், படுக்கைக்கு அடியில் ஏதாவது பணம், ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் அவர்கள் சோதித்து பார்த்தனர். மேலும் அவர்கள் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். வீட்டில் வைக்கப்பட்டிருந்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
ஆவணங்கள் பறிமுதல்வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த புகழேந்தியின் 2 கார்களிலும் அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சோதனையின் போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் மட்டும் வெளியே வந்து ஓட்டலில் மதிய உணவு வாங்கிச் சென்று சாப்பிட்டனர்.
இதேபோல் பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள கர்நாடக மாநில அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்தும் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. இந்த அதிகாரிகள் சென்னையில் இருந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 5 மணி வரை இந்த சோதனை நீடித்தது.