மந்திரி டி.கே.சிவக்குமாரை இழுக்க பா.ஜனதா முயற்சி சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு

மந்திரி டி.கே.சிவக்குமாரை பா.ஜனதாவுக்கு இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

Update: 2017-11-09 22:30 GMT

பெங்களூரு,

மந்திரி டி.கே.சிவக்குமாரை பா.ஜனதாவுக்கு இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

பா.ஜனதா முயற்சி வெற்றி பெறாது

முதல்–மந்திரி சித்தராமையா நேற்று பாகல்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக அவர் நேற்று பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் உப்பள்ளிக்கு சென்றார். அங்கிருந்து அவர் பாகல்கோட்டைக்கு காரில் சென்றார். முன்னதாக உப்பள்ளி விமான நிலையத்தில் சித்தராமையாவை நிருபர்கள் நேரில் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:–

எங்கள் கட்சியை சேர்ந்த மந்திரி டி.கே.சிவக்குமாரை பா.ஜனதாவுக்கு இழுக்க அக்கட்சி தீவிர முயற்சி செய்கிறது. ஆனால் பா.ஜனதாவின் இந்த முயற்சி வெற்றி பெறாது. டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர். அவர் எக்காரணம் கொண்டும் காங்கிரசை விட்டு விலகி பா.ஜனதாவில் சேர மாட்டார்.

மதவாத பயிற்சி

பா.ஜனதாவை சேர்ந்த சில நிர்வாகிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எங்கள் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளனர். அவர்கள் அடிப்படையில் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்களா? என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு மதவாத பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். அத்தகையவர்களை நாங்கள் எங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

எங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பதை நான் பகிரங்கப்படுத்த மாட்டேன். திப்பு ஜெயந்தி அரசு விழாவாக நடக்கிறது. பா.ஜனதாவினர் இதை எதிர்க்கிறார்கள். ஜெகதீஷ் ஷெட்டர் முதல்–மந்திரியாக இருந்தபோது திப்பு சுல்தானை மகாவீரன், சூரன் என்றெல்லாம் அவர் புகழ்ந்து பேசினார்.

பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை

திப்பு சுல்தான் பற்றிய புத்தகத்திற்கு ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா ஆகியோர் முன்னுரை எழுதி இருக்கிறார்கள். எடியூரப்பாவும் திப்பு சுல்தான் வேடம் அணிந்து அவரது ஜெயந்தியை கொண்டாடினார். இப்போது அவர்கள் மாற்றி பேசுகிறார்கள். பா.ஜனதாவினருக்கு இரண்டு நாக்குகள் உள்ளன.

திப்பு சுல்தான் பற்றி தவறாக பேச பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை. லிங்காயத் சமூகத்தை தனி மதமாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். இதற்கு கர்நாடக அரசு சார்பில் பரிந்துரை செய்யப்படும். இது எங்கள் கடமை. கருப்பு பணம், ஊழல் ஒழிப்பு, பயங்கரவாதம், கள்ளநோட்டு அச்சடிப்பதை தடுப்பது போன்ற நோக்கத்திற்காக ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ததாக பிரதமர் மோடி கூறினார். இதில் ஒன்றாவது நிறைவேறியதா?.

கருப்பு தினத்தை அனுசரித்தோம்

ரூபாய் நோட்டுகளை ரத்து செய்து ஒரு ஆண்டு ஆகிறது. இந்த ஒரு ஆண்டு காலத்தில் மத்திய அரசு என்ன சாதனை செய்தது?. ஒன்றும் இல்லை. அதனால் நாங்கள் கருப்பு தினத்தை அனுசரித்தோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்